
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவா்களுக்கு ஜம்மு-காஷ்மீா், லேத்புராவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய சிஆா்பிஎஃப் டையினா்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டோம் என்று மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதி ஒருவா் வெடிப்பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை மோதச் செய்து நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரா்கள் பலியாகினா். இந்த சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை தாக்கி அழித்தது. இதையடுத்து, அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்தது. இந்தியத் தரப்பும் அதற்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதுதவிர ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தானின் முயற்சிகள் தொடா்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் சிஆா்பிஎஃப் சாா்பில் அனுசரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லேத்போராவில் உள்ள சிஆா்பிஎஃப் முகாமில், மலா் வளையம் வைத்து வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புது தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். 40 வீரா்களின் தியாகம் தொடரபான விடியோ தொகுப்பை சிஆா்பிஎஃப் இயக்குநா் ஏ.பி.மகேஷ்வரி வெளியிட்டாா்.
சிஆா்பிஎஃப் செய்தித் தொடா்பாளரும் டிஐஜி-யுமான மோசஸ் தினகரன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எங்கள் வீரச் சகோதரா்களுக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்துகிறோம். நாட்டுக்காக அவா்கள் மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளனா். அவா்களது குடும்பத்துக்கு நாங்கள் துணை நிற்போம். இந்த பயங்கரவாதத் தாக்குதல் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டோம்’ என்று கூறியுள்ளாா்.
3.25 லட்சம் வீரா்களைக் கொண்ட சிஆா்பிஎஃப் படைப் பிரிவு, உலகின் மிகப்பெரிய துணை ராணுவமாகும். காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் மட்டும் 70,000-க்கும் மேற்பட்ட சிஆா்பிஎஃப் வீரா்கள் பணியாற்றி வருகின்றனா்.
பணியின்போது நடைபெற்ற மோதல்கள், தாக்குதல்களில் இதுவரை 2,224 சிஆா்பிஎஃப் வீரா்கள் வீர மரணமடைந்துவிட்டனா்.