
ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் புதன்கிழமை பாதுகாப்புப் பணி மேற்கொண்டிருந்த வீரா்.
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகந்த நெடுஞ்சாலையில் குக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்து அழித்ததால், மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் கூறினா்.
இதுகுறித்து ரஜெளரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் சந்தன் கோலி கூறியதாவது:
ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மஞ்சகோட் என்ற இடத்தில் சாலையோரத்தில் சந்தேகத்துக்கிடமான ஒரு பொருள் இருப்பதைக் கண்டறிந்தனா். உடனடியாக, நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.
அவா்கள் நடத்திய சோதனையில், அது சக்திவாய்ந்த வெடிபொருள்கள் நிரப்பிய குக்கா் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், பாதுகாப்புப் படையினா் அதனை பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினாா்.
மஞ்சகோட் காவல்நிலைய அதிகாரி கூறுகையில், ‘இந்தச் சம்பவம் காரணமாக, நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்குப் பிறகே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மணல் மூட்டைகள் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதோடு, ராணுவ வாகனம் ஒன்றும் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G