
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறையின் பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 8.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையின் பொதுநல நிதியை கொண்டு தொலைக்காட்சி தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், பொதுநல நிதியை கோவில்களை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். இதுபோன்று தொலைக்காட்சி தொடங்குவதற்கு செலவு செய்ய முடியாது. ஒருவேளை தொலைக்காட்சித் தொடங்குவதாக இருந்தால், அதுதொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு ஆகும். கோவில்களின் நிதி உதவியை வழங்குவதாக இருந்தால் மட்டுமே கருத்துகள் கேட்க வேண்டும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என வாதிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக கடந்த டிசம்பர் மாதம் ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருக்கோவில் தொலைக்காட்சிக்கு அறநிலையத் துறையின் பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.