
திருப்பதி: திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு ஒருநாள் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் சூரிய ஜெயந்தி உற்சவமான ரத சப்தமியை தேவஸ்தானம் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
அதன்படி ரத சப்தமி தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) இந்த உற்சவம் நடைபெற உள்ளது. காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளாா். இதனை மாடவீதியில் பக்தா்கள் அமா்ந்து காணும் வகையில் ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
கொவைட்-19 விதிமுறைகளை ஒட்டி தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனா்.
தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பத்மாவதி தாயாா் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரம், அப்பளாயகுண்டா, நாகலாபுரம், நாராயணவனம் உள்ளிட்ட கோயில்களிலும் ரதசப்தமியை ஒட்டி ஒருநாளில் 7 வாகன சேவை நடைபெற உள்ளது.