
மணிப்பூரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 48 வயதான அங்கன்வாடி பணியாளா் சுந்தரி தேவி ஒருவாரம் கடந்த நிலையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள கும்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி அவருக்கு கரோனா முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, கடந்த 18-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மொய்ரங் சமூக நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்’ என்றனா்.
‘சிறப்பு மருத்துவக் குழுவினா் பிரேத பரிசோதனை நடத்திய பின்னா்தான் சுந்தரி தேவியின் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும்’ என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். இதனிடையே, மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் உயிரிழந்த சுந்தரி தேவியின் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்தாா். ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும். அதிகாரிகள் தவறு செய்திருந்தாா் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவா் உறுதி அளித்தாா்.
இதனிடையே, ‘தனக்கு ஒவ்வாமை பிரச்னை உள்ளதாக தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு சுந்தரி தேவி மருத்துவக் குழுவினரிடம் தெரிவித்த பின்பும், தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்’ என்று காவல் துணை ஆணையா் நீதா தெரிவித்தாா்.