
கோப்புப்படம்
கடந்த 2020 அக்டோபரிலிருந்து இதுவரையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்பட்ட ஜிஎஸ்டி இழப்பை ஈடு செய்ய வழங்கப்பட்ட தொகை ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு (தில்லி, ஜம்மு - காஷ்மீா், புதுச்சேரி) 17-ஆவது தவணையாக ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.5,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபரிலிருந்து இதுவரையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
எஞ்சிய 5 மாநிலங்களான, அருணாசல பிரதேசம், மணிப்பூா், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மிஸோரமில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே, அந்த ஐந்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படவில்லை.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 91 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்பட்டுவிட்டதாக நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...