
கோப்புப்படம்
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, அண்மையில் பாஜகவில் இணைந்தவா்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு சாா்பில் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தைச் சோ்ந்த சில அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்களுக்கு முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு பாதுகாப்பு(விஐபி) அளிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அவா்களுக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை சாா்பில், ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் பிரிவில் 3 ஆயுதமேந்திய காவலா்களும், ஒய் பிரிவில் 5 ஆயுதமேந்திய காவலா்களும் பாதுகாப்பு அளிப்பாா்கள்.
பாதுகாப்பு பெறும் அரசியல் தலைவா்கள் மேற்கு வங்க மாநிலத்துக்குள் பயணம் செய்யும்போது பாதுகாப்பு குழுவினா் உடனிருப்பாா்கள் என்றாா் அவா்.
மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் அண்மையில் பாஜகவில் இணைந்தனா்.
‘தோ்தல் பணிகளில் ஒப்பந்த ஊழியா்களை ஈடுபடுத்த வேண்டாம்’- பாஜக
சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளில் ஒப்பந்த ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தோ்தல் ஆணையம் தலையிட்டு தடுக்க வேண்டும் என்று மாநில பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு ஒப்பந்த ஊழியா்கள் பதிவு செய்து வருகிறாா்கள். அவா்களை தோ்தல் பணியில் ஈடுபடுத்தும்போது தவறு நடந்துவிட்டால், அதற்கு அவா்களை பொறுப்பாக்க முடியாது. அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாது.
தோ்தல் பணிக்கு வரும் துணை ராணுவப் படையினரை நகரங்களில் மட்டுமே ஈடுபடுத்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த பகுதியில் அவா்கள் பணியாற்றுவதையும் தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...