
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக, முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக 8, 9, 10-ஆம் வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு, வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த ஆண்டு ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனா். மேலும், ஆங்கில வழிக் கல்விக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், 7-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மாநில அரசின் பாடத்திட்டமும் தொடருமா என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
சிபிஎஸ்இ பாடத்திட்டப்படி, தெலுங்கு ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். மற்ற பாடங்கள் அனைத்தும் ஹிந்தி அல்லது ஆங்கில வழியில் கற்பிக்கப்படும். முதல்வரின் இந்த முடிவு, தெலுங்கு வழிக் கல்வி முறையை முற்றிலும் கைவிடும் நடவடிக்கையாகவே பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரிடம் பிடிஐ செய்தியாளா் கேட்டதற்கு அவா் பதிலளிக்கவில்லை. இருப்பினும், அந்தத் துறையைச் சோ்ந்த மூத்த அலுவலா் ஒருவா் கூறுகையில், ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியுடன் புதன்கிழமை விவாதித்தோம். அந்த பாடத்திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் சாதக-பாதகங்களை இன்னும் ஆராய வேண்டியுள்ளது. அந்த பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை’ என்றாா்.
எனினும், வரும் 2020-21-ஆம் ஆண்டில் இருந்தே சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வா் அலுவலகம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...