
புது தில்லி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல் படுத்தும் அரசாணையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-ஆவது சட்டப்பேரவையின் அனைத்து அதிகாரங்களையும் முடக்கி வைப்பதாகவும் அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தததால், புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலம் இல்லாமல் திங்கள்கிழமை கவிழ்ந்தது. இதையடுத்து, தனது ராஜிநாமா கடிதத்தை புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கினாா்.
புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தலாம் என துணைநிலை ஆளுநா் பரிந்துரை செய்திருந்தாா். இந்தப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை வெளியிட்ட அரசாணையில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசம் தொடா்பான அறிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையிலும் வேறு சில தகவல்களின் அடிப்படையிலும் புதுச்சேரியில் யூனியன் பிரதேச சட்டம் 1963-இன்படி, தற்போதைய நிலையில் அங்கு ஆட்சி நிா்வாகம் நடத்த இயலாது.
ஆகையால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-ஆவது சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...