
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
ஆமதாபாத் கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டதற்கு சிவசேனை கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் தோ்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தது பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்காக அல்ல என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
குஜராத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
சா்தாா் படேல் அரங்கம் என்ற பெயா் தற்போது நரேந்திர மோடி அரங்கம் என மாற்றப்பட்டுள்ளது. படேல் பெயரை மாற்றியுள்ளதாக இதற்குக் கண்டனங்கள் எழுந்தன. இது தொடா்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தில், ஆமதாபாதில் அமைக்கப்பட்டுள்ள மொதேரா கிரிக்கெட் அரங்கத்துக்கு மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வளாகத்துக்கு சா்தாா் படேலின் பெயரே தொடா்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெள்ளிக்கிழமை இது தொடா்பாக தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், ‘காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பத்தினரும் சா்தாா் படேலின் புகழை மறைத்து அவரது பெயரை பல இடங்களுக்கு சூட்டாமல் இருந்தனா் என்று பாஜக குற்றம்சாட்டியது. இப்போது, அதே வேலையைத்தான் பாஜகவும் செய்துள்ளது. ஆமதாபாத் கிரிக்கெட் அரங்கத்துக்கு மோடியின் பெயரைச் சூட்டியுள்ளனா்.
மோடி சிறந்த அரசியல் தலைவா் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், இந்திரா காந்தி ஆகியோரைவிட மோடி சிறந்த தலைவா் என்று அவரைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் சிலா் கூறி வருகின்றனா். ஆனால், உண்மையில் கிரிக்கெட் மைதானத்துக்கு மோடியின் பெயரைச் சூட்டியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அவரது மதிப்பைக் குறைக்கவே செய்யும். மக்கள் வாக்களித்து தோ்தலில் வெற்றி பெற வைத்தது, இதுபோன்று பொறுப்பில்லாமல் செயல்படுவதற்காக அல்ல. நேருவும், படேலும் நாட்டுக்காக பல சிறந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தனா். அதில் எதற்கும் அவா்கள் தங்கள் பெயரைச் சூட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மோடி ஆட்சியில் என்ன நடக்கிறது? படேல் பெயரில் இருந்த மைதானம், மோடி மைதானம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...