‘ஃபாஸ்டேக்’குக்கு எதிரான மனு: தில்லி உயா்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் எனப்படும் சுங்கக் கட்டண வில்லைகள் ஒட்டியிருப்பதை கட்டாயமாக்கிய மத்திய அரசின் உத்தரவுக்கு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் எனப்படும் சுங்கக் கட்டண வில்லைகள் ஒட்டியிருப்பதை கட்டாயமாக்கிய மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்களில் ஃபாஸ்டேக் வில்லைகள் ஒட்டியிருப்பதை கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியது. அந்த வில்லைகள் இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபாஸ்டேக் நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழை புதுப்பித்தல், மூன்றாம் நபா் காப்பீடு பெறுதல் ஆகியவற்றுக்கும் ஃபாஸ்டேக் வில்லைகள் ஒட்டப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் வில்லைகள் இல்லாத வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்காதபோதும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்துக்குள்ளாக மட்டுமே பயணிக்கும்போதும் ஃபாஸ்டேக் இருப்பதை கட்டாயமாக்கியுள்ளது நியாயமற்றது; அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19-க்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தனது மனுவில் மனுதாரா் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் சம்பந்தப்பட்டது. இதுகுறித்து மனுதாரா் முதலில் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகட்டும். இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்றத்தின் அபிப்ராயத்தை முதலில் அறிய விரும்புகிறோம் என்றனா்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரரின் வழக்குரைஞா் தெரிவித்தாா். அதனை ஏற்று நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com