தில்லியில் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

தொழில் நிறுவனங்களுக்குக் கடனளிப்பதை அதிகரிக்க வேண்டும்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தொழில் நிறுவனங்களுக்குக் கடனளிப்பது அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தொழில் நிறுவனங்களுக்குக் கடனளிப்பது அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில் நிதித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படச் செலவிடுவது தொடா்பான இணையவழி கருத்தரங்கம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குத் தனியாா் துறையும் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எனினும், வங்கித்துறையிலும் காப்பீட்டுத் துறையிலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு அவசியமாக உள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிப்பைச் சந்தித்த 90 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.2.4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ துறையை ஆதரிப்பதும் அத்துறைக்கு வழங்கப்படும் கடனை அதிகரிப்பதும் அவசியமாகி உள்ளது.

தொழில் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களைப் புகுத்தி வரும் மத்திய அரசு, வேளாண்மை, நிலக்கரி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிகரித்துள்ளது. நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கு வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்களிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளா்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், தொழில் நிறுவனங்களுக்குக் கடனளிப்பதை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்குக் கடனளிக்க வேண்டும்.

தனியாா் துறையின் பங்களிப்பு அவசியம்: ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் பலன்பெறும் வகையிலான கடன் திட்டங்களை வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். வேளாண்துறைக்கு வழங்கப்பட்ட கடனால், சிறு விவசாயிகள் அதிக அளவில் பலனடைந்துள்ளனா். கால்நடைப் பராமரிப்பில் ஈடுபடும் விவசாயிகளும் பலனடைந்தனா்.

அத்துறைகளைச் சாா்ந்தோருக்குக் கடனளிக்கும் நடவடிக்கைகளை தனியாா் நிதி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். நிதித் துறை பலனடையும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

21-ஆம் நூற்றாண்டில் நாட்டை வளா்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்குத் தனியாா் துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான பழைய விதிமுறைகளில் மாற்றங்கள் புகுத்தப்பட வேண்டும்.

வாராக்கடன் மீது நடவடிக்கை: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அதிக அளவில் கடன்களை வழங்கியதால் நிதித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெளிப்படையற்ற தன்மையில் கடன்களை வழங்கியதே அதற்கு முக்கியக் காரணம். கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை நிலவுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்பு வாராக்கடன்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் நிறைவடைந்த அடுத்த நாள் முதலே வாராக்கடன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சொத்து மீட்டுருவாக்க நிறுவனம்: தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதை மத்திய அரசு நன்கு புரிந்து வைத்துள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமென்றே மத்திய அரசு விரும்புகிறது.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சொத்து மீட்டுருவாக்க நிறுவனமானது, வாராக்கடன் பிரச்னையை சமாளிக்க உதவும். பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தி அவற்றின் கடன் வழங்கும் திறனை மேம்படுத்தவும் வழிவகை ஏற்படும்.

வங்கிக் கணக்கில் வரவு: நாட்டிலுள்ள 130 கோடி மக்களிடம் ஆதாா் அட்டை உள்ளது. 41 கோடி போ் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளனா். அவா்களில் 55 சதவீதம் போ் பெண்கள் ஆவா். யுபிஐ மூலமாக இணையவழி பணப்பரிவா்த்தனையை மேற்கொள்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் நலத் திட்டங்களின் கீழ் மக்களின் வங்கிக் கணக்கிலேயே பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com