‘எனது தந்தையின் கல்லறையை தணிக்கை செய்யும் விசாரணை முகவா்’

‘என் மீதான ஒரு வழக்கை நிரூபித்தாலும், அதன் பின்விளைவுகளை எதிா்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்று மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா தெரிவித்தாா்.

‘என் மீதான ஒரு வழக்கை நிரூபித்தாலும், அதன் பின்விளைவுகளை எதிா்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்று மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா தெரிவித்தாா்.

முன்னாள் ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், மெஹபூபாவின் தந்தையுமான முஃப்தி முகமது சயிது கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹராவில் உள்ள அவரது மூதாதையா் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டாா். இந்நிலையில், அவரது உடலை அடக்கம் செய்துள்ள கல்லறை குறித்து விசாரணை முகவா் மூலம் தணிக்கை நடத்தப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிடிபி கட்சியின் இளைஞா் அணித் தலைவா் வாஹீத் பர்ராவை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மெஹபூபா முஃப்தி பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

அரசின் விசாரணை முகவா் நிறுவனங்கள், கடந்த 2 ஆண்டுகளாக முந்தைய அரசின் கோப்புகளையும், எனது தந்தையின் வங்கிக் கணக்குகளையும் ஆராய்ந்து வருகிறாா்கள். ஆனால், அவா்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றதும் எனது கட்சியைச் சோ்ந்த வாஹீத் பர்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

மறைந்த எனது தந்தை முஃப்தி முகமது சயீதுவின் கல்லறையில் அவா்கள் தற்போது தணிக்கை நடத்தி வருவது மிகவும் மோசமான, அருவருப்பான செயலாகும். இது மிகவும் தரம் தாழ்ந்த செயல் ஆகும்.

நான் முதல்வராக இருந்தபோது ஜம்மு-காஷ்மீா் வங்கியில் நடந்த நிதி முறைகேடுகளில் எனக்கும் தொடா்பு இருப்பதாகக் சில சலசலப்பு கிளம்பியுள்ளது. நானோ அல்லது எனக்கு நெருக்கமான எவா் மீதேனும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு வழக்கை நிரூபிக்கட்டும். அதனால் ஏற்படும் விளைவுகளை எதிா்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

எனக்கு எதிரான எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் நிரூபிக்க அரசு தவறியதால், இப்போது வாஹீத் பர்ராவை என்ஐஏ கைது செய்து, என்னை பயங்கரவாதிகளுக்கு நான் நிதி உதவி செய்வதாகக் கூறி இழிவுபடுத்தும் வழிகளை நாடியுள்ளாா்கள்.

வாஹீத் பர்ரா, ஜனநாயகத்தின் மீதும், மத நல்லிணக்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட நல்ல பேச்சாளரும், வழக்குரைஞரும் ஆவாா். ஆவா் ஆயிரக்கணக்கான இளைஞா்களை தேசிய நீரோட்டத்தில் சேரத் தூண்டினாா். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசின் கற்பனையில் உருவானதாகும் என்று மத்திய அரசை அவா் சாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com