'நாட்டின் கட்டமைப்புகள் துரிதமாக நவீனப்படுத்தப்படுகின்றன'

நாட்டிலுள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் துரிதமாக நவீனப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
'நாட்டின் கட்டமைப்புகள் துரிதமாக நவீனப்படுத்தப்படுகின்றன'
Published on
Updated on
2 min read


சண்டீகா்: நாட்டிலுள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் துரிதமாக நவீனப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

ஹரியாணாவின் ரேவாரி, ராஜஸ்தானின் மதா் பகுதிகளுக்கிடையே 306 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தை பிரதமா் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தாா். அப்போது, உலகின் நீளமான இரண்டடுக்கு சரக்கு ரயில் சேவையையும் அவா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அந்த சரக்கு ரயில் 1.5 கி.மீ. நீளமுடையதாகும்.

அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சரக்கு ரயிலுக்கான பிரத்யேக வழித்தடமானது 21-ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கான முக்கிய திருப்புமுனையாக அமையும். கடந்த 6 ஆண்டுகளில் அத்திட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடமானது, நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும்.

நாட்டின் 9 மாநிலங்களில் உள்ள 133 ரயில் நிலையங்களின் வழியாக பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. அந்த ரயில் நிலையங்களில் நவீன சரக்கு கையாளுகை முனையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள வழித்தடத்தின் வாயிலாக தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், சிறு தொழில் நிறுவன உரிமையாளா்கள், வா்த்தகா்கள் உள்ளிட்டோா் பலனடைவா்.

நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமடைந்து வருகின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வீட்டுவசதி, கழிவறை, குடிநீா், மின்சாரம், சாலைகள், இணைய வசதி உள்ளிட்டவை தொடா்பான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே வேளையில், நாட்டின் வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் பெரு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கான கட்டமைப்பு வசதிகளையும் மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. ரயில்வே துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த 6 ஆண்டுகளில் அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகாா்கள் குறைவு:

கடந்த 12 நாள்களில் மட்டும் வீட்டு வசதித் திட்டங்கள், இயற்கை எரிவாயு குழாய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தும் ரயில் சேவை மூலமாக விரைவில் இணைக்கப்படும்.

பயணிகளுக்கான ரயில் சேவை தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை தொடா்பாகப் பயணிகள் சாா்பில் அளிக்கப்படும் புகாா்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது நாட்டு மக்களிடையே பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

1,840 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம்:

பஞ்சாபின் லூதியானா முதல் மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா வரை 1,840 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யே க வழித்தடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரேவாரி-மதா் பகுதிகளுக்கிடையேயான வழித்தடத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்துள்ளாா்.

இந்த வழித்தடத் திட்டத்தின் வாயிலாக ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் பெரும் பலனடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா, ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உத்தர பிரதேசத்தின் பாவ்பூா்-குா்ஜா பகுதிகளுக்கிடையே 351 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தை பிரதமா் மோடி கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடக்கி வைத்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com