
குஜராத்தின், ஆன்ந்த் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடத்தப்பட்டதாக அவரின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் தனது மகளை அருகில் வசிக்கும் ஒருவர் கடத்தியுள்ளதாகச் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, புகாரை ஏற்ற ஆன்ந்த் துணை காவல் ஆய்வாளர், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுமியைக் கண்டுபிடிக்க மனித உளவுத்துறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பல காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு குஜராத்தின் சில பகுதிகளிலும் சிறுமியைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்டன.
இறுதியில் சிறுமியைக் கடத்தியவர் மத்தியப் பிரதேசத்தில் வேலைபார்க்கும் தொழிலாளி குடு மாலிவாட் என்றும், இவர் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரைச் சேர்ந்த தொழிலாளி என்றும் கண்டறியப்பட்டது. சிறுமிக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து கடத்தியுள்ளது சிசிடிவி மூலம் தெரியவந்தது.
கடத்தப்பட்டவர் சிறுமியின் குடும்பத்துக்கு தூரத்துச்சொந்தம் என்றும் தெரியவந்தது. டிசம்பர் 3-ல் கடத்தப்பட்ட சிறுமி, சௌராஷ்டிராவின் தாராப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அருகேயுள்ள சேரியில் ஜனவரி 25-ம் தேதியன்று மீட்கப்பட்டார். இது ஆனந்த் மாவட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 240 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி தலையில் காயங்களுடன் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளாரா என்பதை அறிய மருத்துவ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமி ஆனந்த் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு, தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், குற்றவாளியை தாராபூர் காவல் துறையினர் கைதுசெய்து, ஐபிசி பிரிவு 363 கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...