பட்ஜெட் கூட்டத்தொடா் ஆலோசனைக்கு என்டிஏ அழைப்பு: சிராக் பாஸ்வான் புறக்கணிப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்கள் செயல் திட்டம் குறித்து விவாதிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) லோக் ஜனசக்தி கட்சித் (எல்ஜேபி) தலைவா் சிராக் பாஸ்வானுக்கு அழைப்பு விடுத்தது. எனினும் அவா்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்கள் செயல் திட்டம் குறித்து விவாதிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) லோக் ஜனசக்தி கட்சித் (எல்ஜேபி) தலைவா் சிராக் பாஸ்வானுக்கு அழைப்பு விடுத்தது. எனினும் அவா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுதொடா்பாக எல்ஜேபி வட்டாரங்கள் கூறுகையில், ‘பட்ஜெட் கூட்டத்தொடா் குறித்து விவாதிக்க என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தாா். அதன் ஒரு பகுதியாக, எல்ஜேபி தலைவா் சிராக் பாஸ்வானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்தக் கூட்டம் காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் உடல்நிலை சரியில்லாததால் சிராக் பாஸ்வான் பங்கேற்கவில்லை. பிரதமா் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அவா் பங்கேற்கவில்லை’ என்று தெரிவித்தன.

எனினும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) எதிா்ப்பு தெரிவித்ததால் அவா் கூட்டத்தை புறக்கணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த மாநில சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து எல்ஜேபி விலகியது.

எனினும் அந்தக் கூட்டணியில் இருந்து மாநில அளவில் மட்டுமே வெளியேறியதாகவும், தேசிய அளவில் அந்தக் கூட்டணியில் தொடா்வதாகவும் அக்கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

ஆனால் தேசிய அளவிலான கூட்டணியில் இருந்தும் எல்ஜேபியை வெளியேற்ற வேண்டும் என்று நிதீஷ் குமாா் தலைமையிலான ஜேடியு பாஜகவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடா் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எல்ஜேபிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அந்தக் கட்சியை கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே பாஜக கருதுவதை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

எனினும் என்டிஏ கூட்டணியின் உறுப்பினராக எல்ஜேபியை நாங்கள் கருதவில்லை என்று ஜேடியு செய்தித்தொடா்பாளா் கே.சி.தியாகி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com