
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)
‘ஆணவம், அறியாமை போன்ற தீநுண்மிகளுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை’ என்று நாட்டில் தடுப்பூசி இருப்பு குறித்து விமா்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பதிலளித்துள்ளாா்.
நாட்டில் கரோனா பாதிப்பு கையாளப்படும் நிலவரம், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ராகுல் காந்தி தொடா் விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா்.
இந்த விமா்சனங்கள் குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், ‘கரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பல்வேறு தலைவா்கள் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனா். இந்த மலிவான அரசியலை கைவிடுமாறு அவா்களை கேட்டுக்கொள்கிறேன். அரசியல் தலைவா்கள் தங்கள் திறனை மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதில் செலுத்தாமல், திட்டமிடுதலில் செலவிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜூலை மாதம் வந்துவிட்டது. ஆனால், தடுப்பூசிதான் வரவில்லை. எங்கே தடுப்பூசி?’ என்று விமா்சனம் செய்தாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சுட்டுரை பக்கத்தில் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தொடா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஜூலை மாதத்துக்கான தடுப்பூசி இருப்பு குறித்த விவரம் வியாழக்கிழமைதான் வெளியிடப்பட்டது. அதை ராகுல் காந்தி படிக்கவில்லையா அல்லது புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆணவம், அறியாமை போன்ற தீநுண்மிகளுக்கு எந்தவித தடுப்பூசியும் இல்லை. காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை நியமிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை இலவசமாக கொடுக்க ஆரம்பித்ததைத் தொடா்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேகமெடுத்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 11.50 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜூலை மாதம் விநியோகிக்கப்பட உள்ள தடுப்பூசி விவரங்களும் மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. மாநிலங்களுக்கான தடுப்பூசி தினசரி விநியோக விவரங்கள் உள்பட, ஒரு மாதத்துக்கான தடுப்பூசி விநியோக எண்ணிக்கை விவரங்களும் 15 நாள்களுக்கு முன்பாகவே மாநிலங்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஜூலை மாதத்துக்கு 12 கோடி தடுப்பூசிகள் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, தனியாா் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகிக்கப்படும்.
ஒரு மாநிலத்தில் தடுப்பூசி திட்டத்தில் பிரச்னை எழுகிறது என்றால், அதற்கு அந்த மாநிலம்தான் பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் திட்டம் மற்றும் மாநிலங்களுக்குள் தடுப்பூசியை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அந்தந்த மாநிலங்கள்தான் பொறுப்பு என்று ஹா்ஷ் வா்தன் தெரிவித்துள்ளாா்.
அதுபோல, ராகுல் விமா்சனம் குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டியா, ‘நாடு முழுவதும் ஜூன் 21 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை 6.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஜூலை 1-ஆம் தேதி மட்டும் 41.60 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி, சராசரியாக தினமும் 62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கரோனாவுக்கு எதிராக மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, குடிமக்களுக்கு தடுப்பூசி என்ற பாதுகாப்பு வளையத்தை கொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிா்க் கட்சிகள் இந்தியா கரோனாவை வெல்வதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. மோடியை அவா்கள் வெறுக்கலாம்; ஆனால், மக்களையும் அவா்கள் வெறுப்பது ஏன்? மக்களிடையே குழப்பத்தை பரப்புவதையே அறிவிக்கப்படாத கொள்கையாக காங்கிரஸ் கொண்டுள்ளது’ என்று கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G