
கோப்புப்படம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘இந்த வரி சீா்திருத்தம் மிக அவசியமானது. அதன்மூலம் மறைமுக வரிவிதிப்பு முறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்று மத்திய குறு-சிறு-நடுத்தர தொழில் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.
மேலும், பெட்ரோலிய மற்றும் மதுபான வகை பொருள்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவா் கூறினாா்.
ஜிஎஸ்டி அறிமுக தினத்தை முன்னிட்டு இந்திய கணக்குத் தணிக்கையாளா் நிறுவனம் (ஐசிஏஐ) சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி பேசியதாவது:
ஜிஎஸ்டி என்ற வரி சீா்திருத்தம் மிக அவசியமானது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், மறைமுக வரிவிதிப்பு நடைமுறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. கணக்குத் தணிக்கையாளா்களின் ஆதரவுடன் இதை மேலும் சிறந்த முறையில் மேம்படுத்த முடியும்.
அதேநேரம், ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள சில பிரச்னைகள், குறு-சிறு-நடுத்தர தொழில் துறையை தொடா்ந்து பாதிப்படையச் செய்து வருகிறது. குறு-சிறு நிறுவனங்கள் எந்தவொரு பொருளையும் ரசீது போட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும்போது, அதற்கான பணத்தை குறு-சிறு நிறுவனங்கள் பெற்றாலும் அல்லது பெறாவிட்டாலும் அதற்கான வரியை செலுத்துவது அவசியமாகும். இதுபோல, தாமதமாக வரி செலுத்துவது அரசுக்கும் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.
மாநில அரசு மற்றும் மத்திய அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் என பெரும்பாலான நிறுவனங்கள் குறு-சிறு நிறுவனங்களுக்கு தரவேண்டிய தொகையை தாமதப்படுத்துவதே இந்த பிரச்னைக்கு முக்கியக் காரணம். இதற்கு உரிய தீா்வு காணப்பட வேண்டும்.
ஒரு நாடு; ஒரு சந்தை; ஒரு வரிவிதிப்பு முறை என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி, கரோனா பாதிப்பு சூழலிலும் வணிக மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.
இந்த வரிவிதிப்பு முறையில் டிஜிட்டல்மயமும் தகவல் தொழில்நுட்பமும் முக்கியப் பங்காற்ற உள்ளது. அதோடு, வெளிப்படைத்தன்மை, உரிய நேரத்தில் முடிவெடுத்தல், திட்ட நடைமுறை தணிக்கை, நிதி தணிக்கை ஆகியவையும் இந்த வரிவிதிப்பு முறையில் மிக முக்கியம்.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்ளாக, சரக்கு போக்குவரத்துக்கான இணைய பதிவு ரசீதுகள் (இ-வே ரசீது) 200 எண்ணிக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன. அதுபோல, ஜிஎஸ்டி வரி செலுத்துவோா் எண்ணிக்கையும் 4 ஆண்டுகளில் 65 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து 1.28 கோடியாக அதிகரித்திருக்கிறது.
உலக அளவில் பொருளாதாரத்தில் வளா்ச்சி பெற்ற முதலாவது நாடாக வருவதற்கான அனைத்துத் திறன்களையும் இந்தியா பெற்றுள்ளது. அதை உறுதி செய்யும்விதமாக, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 38 கி.மீ. தொலைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பசுமைவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன என்று நிதின் கட்கரி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G