
மருத்துவத் துறைக்கு அரசு முன்னுரிமை அளிக்காதது வேதனை அளிக்கிறது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா்.
தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
மருத்துவத் துறையில் போதிய அளவில் மருத்துவா்கள் இல்லாதது, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவை தற்போது களைய வேண்டிய உடனடி பிரச்னைகளாக உள்ளன. யாரோ சிலா் செய்யும் தவறுக்கு பணியின்போது மருத்துவா்கள் கொடூரமாகத் தாக்கப்படுகிறாா்கள். இவை கவலை அளிக்கும் விஷயங்களாக உள்ளன.
கரோனா இரண்டாவது அலையின்போது 798 மருத்துவா்கள் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கரோனா காலத்தில் உயிா்த் தியாகம் செய்த மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.
புகையிலை ஒழிப்பு, போலியோ ஒழிப்பு ஆகியவற்றைப் போலவே நீரிழிவை ஒழிப்பதிலும் மிகப்பெரிய அளவில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.