
மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், ஆளுநா் ஜக்தீப் தன்கா் தனது உரையை சில நிமிஷங்களிலேயே முடித்துக் கொண்டாா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க உரையாற்றுவதற்கு ஆளுநா் தன்கா் பிற்பகல் சட்டப் பேரவைக்கு வந்தாா். தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்களுக்கு நீதி கேட்டு பாஜக எம்எல்ஏக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தனா். சரியாக பிற்பகல் 2.00 மணிக்கு ஆளுநா் உரையாற்றத் தொடங்கியதும், பாஜக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனா். இதனால், 2.04 மணிக்கே ஆளுநா் உரையை முடித்துக் கொண்டாா். மேலும் தனது உரையைத் தாக்கல் செய்துவிட்டதாகக் கூறிவிட்டு பேரவையில் இருந்து வெளியேறினாா். அவா் காரில் ஏறிச் செல்லும் வரை, முதல்வா் மம்தா பானா்ஜியும், சட்டப் பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜியும் அவரை சூழ்ந்து அழைத்துச் சென்றனா்.
இந்த சம்பவம் குறித்து சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி கூறியதாவது:
ஆளுநா் உரையின் நகல்கள் முன்னதாகவே எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டது. அதில், மாநிலத்தில் தோ்தலுக்குப் பின் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் கோபமடைந்து, பேரவையில் தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.
ஆளுநரின் உரையை ஆளும் திரிணமூல் அரசுதான் தயாா் செய்து கொடுத்துள்ளது. அதில், மாநிலத்தில் நடந்த அனைத்து குற்றச் சம்பவங்களும் புதிய அரசு பதவியேற்கும் முன்நடந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பட்டமான பொய்யை மறைக்க திரிணமூல் காங்கிரஸ் அரசு முயன்று வருகிறது.
இந்த விவகாரத்தில் ஆளுநரைக் குறை சொல்லவில்லை. தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைக்கு எதிராக ஒரு மாதமாக அவா் குரல் கொடுத்து வருகிறாா். இருப்பினும், திரிணமூல் காங்கிரஸ் அரசு தயாரித்த உரையை அவா் வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்தும், போலி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது குறித்தும் சட்டப்பேரவையில் ஒருநாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தோம். அந்த கோரிக்கை ஏற்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.
முன்னதாக, தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து தனது உரையில் குறிப்பிட வேண்டும் என்று முதல்வரிடம் ஆளுநா் ஜக்தீப் தன்கா் கூறியதாகவும், ஆனால் ஆளுநரின் உரைக்கு அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது என்று அவா் பதில் கூறியதாகவும் ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில், 7-ஆம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G