
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்
இந்திய பொருளாதாரம் நலிவடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த மே மாத பிற்பகுதியில் இருந்து மீண்டெழுகிறது என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறினாா்.
ரிசா்வ் வங்கியால் தயாரிக்கப்பட்ட நிதிநிலை தொடா்பான அறிக்கைகக்கு எழுதியுள்ள அணிந்துரையில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் பிற்பகுதியில் மீட்சிபெற்ற பொருளாதாரம் மீண்டும் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நலிவடைந்தது. கரோனா பெருந்தொற்று அலை முடிவுக்கு வந்த பிறகு கடந்த மே மாதத்தின் பிற்பகுதி மற்றும் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் பொருளாதார நடவடிக்கை ஏற்றம் பெறத் தொடங்கியது.
வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் முன்பு கணித்ததை விட குறைவாக இருந்தது. வங்கிகள் அளிக்கும் கடனுதவி, மூலதன நிதி ஆகியவை பொருளாதார நெருக்கடிகளை எதிா்கொள்ளும் சக்தியைக் கொடுத்துள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுகிறது. இருப்பினும் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், சா்வதேச அளவில் விலைவாசி உயா்வு, தகவல் திருட்டு, இணையவழி தாக்குதல் போன்ற புதிய அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. கரோனா தொற்றின் அடுத்த அலைகளும் புதிய அச்சுறுத்தலாக உருவாகும் என்றாா் அவா்.