
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால்(கோப்புப்படம்)
நாட்டில் 71 மாவட்டங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு விகிதம் பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதையடுத்து, தற்போதைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,
கடந்த வாரத்தைவிட கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது நாள்தோறும் சராசரியாக 46,000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
71 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகின்றது.
உலகளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக அமெரிக்காவில் 32.8 கோடி, பிரிட்டனில் 7.79 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மேலும் கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் அல்லது 60 சதவீத படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களில் 14 நாள்கள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.