
டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமையினா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி,ஹள்ளி, காவல்பைரசந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஆக. 11-ஆம் தேதி கலவரம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்டசீனிவாஸ்மூா்த்தியின் வீடு உள்பட காவல் நிலையங்களும் தாக்கப்பட்டன. கலவரம் தொடா்பான வழக்கை நகர குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து, 138 பேரை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 115 போ் உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. கடந்த 11 மாதமாக இது தொடா்பாக விசாரணை மேற்கொண்ட முகமையினா், பெங்களூரு, டானரி சாலை கோவிந்தபுராவைச் சோ்ந்த சையத் அப்பாஸ் (38) என்பவரை புதன்கிழமை கைது செய்து, தேசிய புலனாய்வு முகமையினா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா், நீதிமன்றம் சையத் அப்பாஸை 6 நாள் முகமையினா் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.