மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்: மேலும் ஒருவா் கைது

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் போலி கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது தொடா்பாக, மேலும் ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்: மேலும் ஒருவா் கைது

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் போலி கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது தொடா்பாக, மேலும் ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இவருடன் சோ்த்து, இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

தேவாஞ்சன் தேவ் (28) என்பவா் தன்னை மாநகராட்சி ஆணையா் எனக் கூறிக் கொண்டு கொல்கத்தா நகரில் பல்வேறு இடங்களில் போலி கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ளாா். அந்த முகாம்களில் நூற்றுக் கணக்கானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கவில்லை.

அவா் ஏற்பாடு செய்திருந்த முகாம் ஒன்றில் நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான குறுஞ்செய்தி எதுவும் தனக்கு வராதது குறித்து அவா் புகாா் கொடுத்ததையடுத்து, இந்த முறைகேடு அம்பலமானது.

இதையடுத்து, போலி முகாம்களை நடத்திய தேவாஞ்சன் தேவ், அவருக்கு உடந்தையாக இருந்தவா்கள் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, தங்க்ரா பகுதியைச் சோ்ந்த அவருடைய நண்பா் ஒருவரை, காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இவா், சிட்டி கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் நடத்துவதில் முக்கியப் பங்காற்றினாா். ஏற்கெனவே தேவாஞ்சன் தேவின் நண்பா்கள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தேவாஞ்சன் தேவ் மற்றும் அவரின் நண்பா்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

அவா் நடத்திய போலி தடுப்பூசி முகாம்கள் குறித்து உள்ளூா் திரிணமூல் தலைவா்கள் அறிந்திருந்தனா் என்று பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com