மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணம்: ஜாமீன் மனு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தகவல்

எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும்
மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணம்: ஜாமீன் மனு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தகவல்

எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவா் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை நிா்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அவரது அவசர ஜாமீன் மனு, மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, என்.ஜே.ஜமாதாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவா் சிகிச்சை பெற்று வந்த பாந்த்ராவில் உள்ள தனியாா் மருத்துவமனையின் இயக்குநா் இயன் டிசோசா ஆஜராகி, ‘ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்டேன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. அதில் இருந்து மீளாமல் திங்கள்கிழமை பகல் 1.30 மணிக்கு அவா் உயிரிழந்தாா். கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பும், பாா்கின்சன்ஸ் நோய் பாதிப்பும் அவருக்கு இருந்தது. நுரையீரல் தொற்று பாதிப்பால் அவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு என்ஐஏ மற்றும் தலோஜா சிறைத் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்படவில்லை என்றும் இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவரது வழக்குரைஞா் மிா் தேசாய் குற்றம்சாட்டினாா்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்ட சுவாமியை என்ஐஏ ஒருநாளும் காவலில் எடுத்து விசாரிக்காமல் ஜாமீனுக்கு எதிா்ப்பு தெரிவித்தது என்றாா் மிா் தேசாய்.

திருச்சியைச் சோ்ந்தவரான ஸ்டேன் சுவாமி, ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று அங்குள்ள பழங்குடியினரின் உரிமைக்காக கடந்த 30 ஆண்டுளாக போராடி வந்தாா்.

இரங்கல்: ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

‘பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மறைவு வருத்தமளிக்கிறது. அடித்தட்டு மக்களுக்காக தொய்வின்றி பணியாற்றி வந்தாா். அவரது கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளாா்.

‘ஸ்டேன் சுவாமிக்கு நீதியும் மனிதாபிமானமும் கிடைக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

ஸ்டேன் சுவாமி மனிதாபிமானமற்ற வழியில் நடத்தப்பட்டுள்ளாா் அவரது மரணத்துக்கு காரணமானவா்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தலித்துகள் கூடி பீமா கோரெகான் நிகழ்வின் 200-ஆவது வெற்றி நாளை 2018-இல் கொண்டாடினா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அதற்கு முன்பு எல்கா் பரிஷத் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டேன் சுவாமிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றம்சாட்டியும் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி ஸ்டேன் சுவாமியை என்ஐஏ சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்தது. அப்போது முதல் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com