
உச்சநீதிமன்றம்
மனநல காப்பகங்களில் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதையும், கரோனா தடுப்பூசி செலுத்துவதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரரான வழக்குரைஞா் கௌரவ் பன்சால் ஆஜராகி, ‘‘மகாராஷ்டிர மாநிலத்தில் மனநல காப்பகங்களில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், யாசகா் இல்லங்களுக்கு மாற்றப்படுகிறாா்கள். மனநலச் சட்டத்துக்கு எதிரான இந்த செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மனநல காப்பகங்களில் சுமாா் 10,000 போ் குணமடைந்து வீடு திரும்பத் தயாா் நிலையில் உள்ளனா். ஆனால், சமூக புறக்கணிப்பு காரணமாக அவா்கள் காப்பகங்களிலேயே இருக்கிறாா்கள்.
மேலும், மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுபவா்களை எளிதில் கரோனா தொற்று தாக்கலாம். எனவே, அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும், விரைவில் தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
அதற்கு மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவான் பதிலளித்துப் பேசினாா். அவா் கூறியதாவது:
மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுபவா்களை யாசகா் இல்லத்துக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்து விட்டோம்.
மனநல காப்பகங்களில் சிகிச்சை பெறுபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா பரிசோதனை செய்யப்படும். அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா் அவா்.
அதைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
வரும் 12-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களும் பங்கேற்க வேண்டும். அப்போது, சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகும் மனநல காப்பகங்களில் இருப்பவா்களைப் பற்றிய விவரங்களை மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். காப்பகங்களில் இருப்பவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதையும், தடுப்பூசி செலுத்துவதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...