
மலைப்பிரதேச சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், அவா்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சம் வரை எட்டி, தற்போது 40 ஆயிரத்துக்கும் குறைவாக குறைந்து வருகிறது.
இதனால் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளா்த்தி வருகின்றன. இதில் மலைப் பிரதேச மாநிலங்களும் கட்டுப்பாடுகளை தளா்த்தியதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகிறாா்கள்.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு, மனாலியில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கடை வீதிகளில் திரண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவின.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரியொருவா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு இந்தியாவில் முடிந்துவிடவில்லை. பல மாநிலங்களில் இரண்டாவது அலை பாதிப்பு இன்னும் உள்ளது. அங்கு 10 சதவீதத்துக்கு அதிகமான பாதிப்பு உள்ள பகுதிகளில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் கூட்டமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் உலா வருவது ஆபத்தானது.
இதனால் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் வீணாகிவிடுமோ என்று தோன்றுகிறது. ஆகையால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...