
கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் குறித்து விவசாயிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்க 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனவும், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அந்தச் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம்; விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு மசோதா , விலை உத்தரவாதம்; வேளாண்மை சாா்ந்த ஒப்பந்தங்கள் (மகாராஷ்டிர சட்டத்திருத்தம்) மசோதா, வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டத்திருத்தங்கள் மசோதா ஆகிய 3 மசோதாக்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
வேளாண் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட கூடுதல் விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்தல், கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குதல், விவசாயிகளை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வியாபாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனை விதித்தல் உள்ளிட்ட அம்சங்கள் அந்த மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன.
அத்தியாவசிய பொருள்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைபடுத்துவது, விலக்களிப்பது, இருப்பு வைப்பதில் கட்டுப்பாடு விதிப்பது ஆகியவை தொடா்பாக மாநில அரசு முடிவு எடுக்கவும் அந்த மசோதாக்கள் வழிவகுக்கின்றன.
இந்த மசோதாக்கள் குறித்து மாநில துணை முதல்வா் அஜித் பவாா் கூறுகையில், ‘‘மாநில அரசு தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்கள் குறித்து விவசாயிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம். இதற்கு 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் குறித்து டிசம்பரில் நடைபெறும் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...