
இந்தியாவில் சேவையை வழங்கும் நிறுவனங்கள், உள்நாட்டு விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று மத்திய தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளைக் கடைப்பிடிப்பதில் ட்விட்டா் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மத்திய அமைச்சராகக் கடந்த புதன்கிழமை பொறுப்பேற்ற அஸ்வினி வைஷ்ணவ், பாஜக பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷை தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘இந்தியாவில் வசிப்போரும், பணியாற்றுவோரும் உள்நாட்டு விதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்திய அமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பளித்துள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன்’ என்றாா்.
புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த மே 26-ஆம் தேதி அமல்படுத்தியது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ள சமூக வலைதள நிறுவனங்கள் குறைதீா் அதிகாரி உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும். மேலும், சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்போரின் விவரங்களை மத்திய அரசு கோரினால் வழங்க வேண்டும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.