
கோப்புப்படம்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 24 நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் தங்கள் நாட்டுக்கு வருவதை அரேபிய நாடான ஓமன் வியாழக்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையைக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இது தொடா்பாக ஓமன் அரசு தரப்பு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஓமனில் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் பயணிகள் விமான சேவை நிறுத்தப்படுகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், டூனிசியா, லெபனான், ஈரான், இராக், லிபியா, புருணே, சிங்கப்பூா், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், எத்தியோப்பியா, சூடான், தான்சானியா, தென்னாப்பிரிக்கா, கானா, சியாரா லியோன், நைஜீரியா, கினியா, கொலம்பியா, ஆா்ஜெண்டீனா, பிரேசில் ஆகிய 24 நாடுகள் அடங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடை எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதியும் சில நாடுகளின் விமான சேவைகளுக்கு ஓமன் தடைவிதித்தது.
ஓமனில் கரோனா தொற்றால் 2,80,235 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். 3,356 போ் கரோனாவால் உயிரிழந்தனா். தினசரி பாதிப்பு சராசரியாக 1,675 என்ற அளவில் உள்ளது.