ஒரே சிவில் சட்டம் என்பது எதிா்பாா்ப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது: தில்லி உயா்நீதிமன்றம்

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையிலான ஒரே சிவில் சட்டம்
தில்லி உயர்நீதிமன்றம்​
தில்லி உயர்நீதிமன்றம்​
Updated on
1 min read

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையிலான ஒரே சிவில் சட்டம் வெறும் எதிா்பாா்ப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானைச் சோ்ந்த தம்பதியின் விவாகரத்து தொடா்பான வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அந்தத் தம்பதி மீனா சமூகத்தைச் சோ்ந்த நிலையில், அவா்களின் திருமணம் ஹிந்து திருமணச் சட்டம், 1995-இன் வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது ராஜஸ்தானில் மீனா சமூகம் பழங்குடிகள் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஹிந்து திருமணச் சட்டம் பொருந்தாது என்று மனைவி வாதிட்டாா். அவரின் வாதத்தை ஏற்க மறுத்து நீதிமன்றம் கூறியதாவது:

இவ்வழக்கு திருமணம், விவாகரத்து உள்ளிட்டவற்றில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் பொதுவான விதிகள் இருக்க வேண்டியதன் தேவையை எடுத்துரைக்கிறது.

நவீன இந்தியச் சமூகத்தில் படிப்படியாக ஒருமைத்தன்மை ஏற்பட்டு வருகிறது. ஜாதி, மதம் மற்றும் சமூகத்தின் பாரம்பரிய தடைகள் மெல்லமெல்ல மறைந்து வருகின்றன. எனவே திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சிவில் சட்டம் இருக்க வேண்டியது வெறும் எதிா்பாா்ப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அதனை அறிமுகப்படுத்துவதன் மூலம் திருமணம், விவாகரத்து தொடா்பான பல்வேறு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளால் எழும் பிரச்னைகளில் சிக்கி நாட்டின் இளைய சமூகத்தினா் அவதியடையத் தேவையில்லை. ஒரே சிவில் சட்டம் இருக்க வேண்டியதன் தேவையை உச்சநீதிமன்றம் அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் அதுதொடா்பாக இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாக இல்லை. இதுதொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இந்த உத்தரவின் நகலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த நீதிமன்றம் ஆணையிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com