
கோப்புப்படம்
கடற்படைத் தளம், கடற்படைக்குச் சொந்தமான கட்டடங்கள், இடங்களைச் சுற்றி 3 கி.மீ. சுற்றளவுக்கு ட்ரோன்கள் போன்ற ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு இந்திய கடற்படை தடைவிதித்துள்ளது.
இதுதொடா்பாக கடற்படை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரிமோட் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் உள்ளிட்ட மரபுசாரா வான்வழி கருவிகள் கடற்படைத் தளத்தையொட்டி 3 கி.மீ. சுற்றளவுக்குள் பறந்தால் அழிக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். மேலும், அதை இயக்குவோா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 121, 121ஏ, 287, 336, 337, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த மாதம் ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இருவா் காயமடைந்தனா். ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக எழுந்துள்ள நிலையில், கடற்படை இந்தத் தடையை விதித்துள்ளது.