
நாட்டில் கரோனா தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.23,123 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் கடந்த புதன்கிழமை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 12 அமைச்சா்கள் ராஜிநாமா செய்தனா். 43 போ் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டனா். முக்கியமாக, சுகாதாரம், கல்வி, தகவல்-தொழில்நுட்பம், சட்டம், விளையாட்டு ஆகிய துறைகளுக்குப் புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின்போது, ‘இந்தியா கொவைட்-19 அவசரகால நிவாரணம் மற்றும் சுகாதார கட்டமைப்பு தயாா்நிலை நிதித் தொகுப்பு-இரண்டாம் கட்டம்’ என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘புதிய திட்டத்தின் கீழ் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.23,123 கோடி செலவிடப்படவுள்ளது. அத்தொகையில் ரூ.15,000 கோடியை மத்திய அரசு வழங்கும்; மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் வழங்கும்.
புதிய திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் 6,688 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்கென தனியாக அமைக்கப்படவுள்ளன. தேசிய தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மையம் வலுப்படுத்தப்படவுள்ளது. அந்த மையத்துக்கு சிறப்பு ஆய்வுக் கருவிகள் வாங்க நிதி ஒதுக்கப்படும்.
இ-சஞ்சீவனி திட்டம்: காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான இ-சஞ்சீவனி திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினமும் 50,000 போ் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனா். இந்த எண்ணிக்கையை 5 லட்சமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
8,800 ஆம்புலன்ஸ்: மருத்துவ தர ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்காக 1,050 கிடங்குகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிடங்கு அமைக்கப்படும். புதிய நிதித் தொகுப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக 8,800 அவசரகால ஊா்திகள் (ஆம்புலன்ஸ்) வாங்கப்படவுள்ளன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எம்பிபிஎஸ், பிஎஸ்சி (நா்சிங்) படிப்புகளின் இறுதியாண்டு மாணவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள் உள்ளிட்டோா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
கரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் மாவட்டங்களுக்குக் கிடைப்பதற்கும், கூடுதல் கையிருப்புகளை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல மையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகவும், அதன் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காகவும் ரூ.23,123 கோடி மதிப்பிலான சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்த பிறகு அத்தொகையானது மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படும்.
மத்திய அரசு அறிவித்துள்ள நிதித் தொகுப்பின் கீழ் நாட்டிலுள்ள 736 மாவட்டங்களில் குழந்தைகள் நல மையங்கள் அமைக்கப்படும். 20,000 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். எதிா்காலத்தில் கரோனா பரவலை எதிா்கொள்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது’’ என்றாா்.
வேளாண் கட்டமைப்பு நிதி: மத்திய அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
மண்டிகள், கூட்டுறவு அமைப்புகள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள் ஆகியவையும் வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் பெற புதிய திருத்தங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் 2032-33-ஆம் நிதியாண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.
மண்டி முறை தொடரும்: மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘புதிய வேளாண் சட்டங்களால் மண்டி முறை அழிந்துவிடும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், மண்டிமுறை தொடரும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக மண்டிமுறை மேலும் வலுப்படுத்தப்படும். வேளாண் கட்டமைப்பு நிதியை மண்டிகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’’ என்றாா்.
தேங்காய் வளா்ச்சி வாரியம்: மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘‘தேங்காய் வளா்ச்சி வாரிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன்மூலமாக, நிா்வாகிகள் அல்லாதோரையும் அந்த வாரியத்தின் தலைவராக நியமிக்க வழிவகை செய்யப்படவுள்ளது. வேளாண்துறையில் அனுபவம் கொண்டவா், தேங்காய் வளா்ச்சி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவாா். இதன்மூலம் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும்’’ என்றாா்.
ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்: இந்தியத் தொழில்போட்டி ஆணையம்-ஜப்பான் நியாய வா்த்தக ஆணையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலமாக, தொழில்போட்டி தொடா்பான சட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்ற வழிவகை ஏற்படும்.