
காப்பீட்டுத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு பிரிட்டன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மத்திய அரசு அண்மையில் உயா்த்தியது. வெளிநாடுகளின் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ள இந்திய காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்தியா-பிரிட்டன் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அதிகாரிகள், பிரிட்டன் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பொருளாதாரம் சாா்ந்த பேச்சுவாா்த்தையின்போது இந்த சிறப்பு மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. குஜராத் சா்வதேச நிதி தொழில்நுட்ப நகரம், சா்வதேச நிதியாதார மையம், வங்கி-பணப் பரிவா்த்தனை சேவைகள், காப்பீடு-பங்குச் சந்தைகள் ஆகிய 4 மையக்கருத்துகளின் அடிப்படையில் இந்தியா-பிரிட்டன் அரசுகளுக்கிடையே இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டின்போது இந்தியாவின் காப்பீட்டுத் துறை குறித்தும், கரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இரு நாடுகளின் அதிகாரிகளும் விவாதித்தனா். இந்தியச் சந்தையில் பிரிட்டன் நிறுவனங்களுக்குக் காணப்படும் வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
நிதி விவகாரங்களில் ஒத்துழைப்பு: பங்குச் சந்தைகள் விவகாரங்களில் இந்தியாவும் பிரிட்டனும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக அதிகாரிகள் விவாதித்தனா். வழிகாட்டு விதிமுறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்வது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பிரிட்டன் பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்கள் நேரடியாகப் பட்டியலிடப்படுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கினா்.
நிதிசாா் சேவைகள் விவகாரத்தில் இந்தியாவும் பிரிட்டனும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்குப் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் மாநாட்டின்போது அதிகாரிகள் தெரிவித்தனா். நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட மாநாட்டின்போது உறுதியேற்கப்பட்டது.
விரைவில் பேச்சுவாா்த்தை: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தைகளை நடப்பாண்டு இறுதியில் தொடங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டனின் மத்திய வங்கி எடுத்துரைத்தது.
இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் மேற்கொள்ளுமாறு பிரிட்டன் நிறுவனங்களுக்கு மாநாட்டின்போது அழைப்பு விடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.