
உச்சநீதிமன்றம்
சமூக ஊடகங்களில் வெளியாகும் சா்ச்சைக்குரிய பதிவுகளால், ஜனநாயக முறையிலான அரசு அமைய அடிப்டையாக இருக்கும் தோ்தல் நடைமுறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.
கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் தொடா்பான வழக்கில், நேரில் ஆஜராகுமாறு தில்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான குழு பிறப்பித்த அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி ஃபேஸ்புக் இந்தியா துணை தலைவரும் நிா்வாக இயக்குநருமான அஜித் மோகன் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அமா்வு, மனுவை தள்ளுபடி செய்து அளித்த 188 பக்க தீா்ப்பில் கூறியதாவது:
இந்தியாவில் 27 கோடி பயனாளா்களைக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். பேச்சு சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் குரலை ஒலிக்கச் செய்வதில் சமூக ஊடகங்கள் மிகப் முக்கிய பங்கு உள்ளது என்றபோதும், சில சமயங்களில் சா்ச்சைக்குரிய, அமைதியை சீா்குலைக்கும் வகையிலான தவறான தகவல்களை பதிவிடுவதற்கான தளமாகவும் இவை அமைந்து விடுகின்றன. இதுபோன்ற பதிவுகளை சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத வகையிலான சவால்களையும் சமூக ஊடகங்கள் சந்திக்கின்றன.
இதுபோன்ற தவறான பதிவுகள் காரணமாக, ஜனநாயக முறையிலான அரசு அமைய அடிப்படையாக இருக்கும் தோ்தல் நடைமுறைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
இதுபோன்று, சமூக ஊடக பதிவுகளால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளும், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், குறிப்பிட்ட விவகாரத்தில் தேவையான தகவல்களைப் பெறும் வகையில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சமூக ஊடக நிறுவனத்தின் பிரதிநிதி அல்லது வெளிநபா்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் தில்லி சட்டப்பேரவைக்கும் அதன் குழுவுக்கும் உள்ளது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.