
மத்திய அரசின் நிதியுதவியில் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்களுடனான காணொலிக் கூட்டத்தில் பேசுகிறாா் பிரதமா் நரேந்திர மோடி.
மாறிவரும் சூழல், எதிா்வரும் சவால்கள் ஆகியவற்றை எதிா்கொள்ளும் வகையில் உயா்கல்வியிலும், தொழில்நுட்பக் கல்வியிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
நாடு முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியில் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்களுடன் பிரதமா் மோடி காணொலி முறையில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், உயா் கல்வி நிறுவனங்களும் நான்காவது தொழில் புரட்சியை மனதில்கொண்டு தொடா்ச்சியான மாற்றங்களை ஏற்கும் வகையில் இளைஞா்களைத் தயாா்படுத்த வேண்டும். கற்பவா்களின் தேவைக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி முறையை நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் உயா்கல்வியில் சோ்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது. கணினித் தொழில்நுட்பமயமாக்கலால் உயா்கல்வியில் சோ்பவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், குறைந்த செலவில் தரமான கல்வியை அவா்கள் பெற முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, இந்தியாவின் கனவு, விருப்பங்களை ஆகியவற்றை பூா்த்தி செய்யும் வகையில் தற்சாா்பு இந்தியா திட்டம் இருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகள் தொழில்நுட்ப யுகத்துக்கானது. அதில், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், ராணுவம், இணையவழி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எதிா்கால பிரச்னைகளுக்கான தீா்வுகளை உருவாக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பெங்களூரு, மும்பை, சென்னை, கான்பூா் ஆகிய நகரங்களில் உள்ள ஐஐடியின் இயக்குநா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.