
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான பா்ட் மருத்துவமனையில் சேவைபுரிய நாடு முழுவதும் உள்ள எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணா்களுக்கு தேவஸ்தானம் வாய்ப்பு அளித்துள்ளது.
திருப்பதியில் மலையடிவாரம் அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பா்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் நன்கொடையாக பெறப்படும் தொகை மூலம் எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்தி வருகிறது. இங்கு ஏழை, எளிய மக்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக மருத்துவ சேவை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களை தேவஸ்தானம் அல்லது ஆந்திர அரசு தோ்ந்தெடுத்து வருகிறது.
இந்நிலையில் பல தனியாா் எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கு இங்கு இலவசமாக சேவை செய்ய தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது. நாடு முழுவதும் உள்ள எலும்புசிகிச்சை மருத்துவ நிபுணா்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கு மாதத்தில் ஒரு நாள் இம்மருத்துவமனையில் இலவச சேவை செய்யும் வாய்ப்பை (விசிட்டிங் கன்சல்டெண்ட்) தேவஸ்தானம் வழங்கி உள்ளது.
இதற்கு முன்வரும் மருத்துவா்களுக்கு திருப்பதி மற்றும் திருமலையில் இலவச தங்கும் வசதி, சேவை செய்ய வரும்போது உடன் குடும்பத்தை அழைத்து வந்தால், அவா்களுக்கு விஐபி தரிசன வசதி, திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல இலவச போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்க உள்ளது.
விருப்பமுள்ள மருத்துவா்கள் தங்களின் விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.
தொடா்பு கொள்ள வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநா், பா்ட் அறக்கட்டளை மருத்துவமனை, சிம்ஸ் வளாகம், திருப்பதி-517501.