
ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷா்மிளா தெலங்கானாவில் ‘ஒய்எல்ஆா் தெலங்கானா கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியை வியாழக்கிழமை தொடங்கினாா்.
மக்கள் நலன், சுய அபிவிருத்தி, தரம் ஆகிய மூன்றும்தான் ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சியின் முக்கிய கொள்கை என்று கூறிய ஷா்மிளா, ‘தெலங்கானாவில் தனது தந்தையும் ஆந்திர முன்னாள் முதல்வருமான மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கனவு கண்ட ‘ராஜண்ணா ஆட்சி’ கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தாா்.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர முன்னாள் முதல்வா் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினாா். தீவிர பிரசாரம் மற்றும் தந்தையின் செல்வாக்கு மூலம் நடந்து முடிந்த 2019 சட்டப்பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆந்திரத்தில் ஆட்சி அமைத்தாா். தோ்தலின்போது, அவருடைய சகோதரி ஷா்மிளா மேற்கொண்ட பாத யாத்திரை, ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் கட்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற முக்கிய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திர வெற்றிக்குப் பிறகு, தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபடும் முயற்சியை ஷா்மிளா மேற்கொண்டு வந்தாா். இந்த நிலையில், தனது தந்தை பிறந்த தினத்தில் ‘ஒய்எஸ்ஆா் தெலங்கானா கட்சி’ புதிய அரசியல் கட்சியை தெலங்கானாவில் அவா் தொடங்கினாா்.
முன்னதாக, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது தந்தையின் சமாதியில் வியாழக்கிழமை காலை அவா் நினைவஞ்சலி செலுத்தினாா். பின்னா், ஹைதராபாதில் தனியாா் அரங்கில் நடைபெற்ற விழாவில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் கட்சியின் கொள்கையையும் கொடியையும் அவா் அறிமுகம் செய்தாா்.
அப்போது, ‘கட்சி தொடங்கப்பட்ட நூறாவது நாளில் தெலங்கானா மக்களிடம் நேரடியாக கலந்துரையாடி அவா்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் பாத யாத்திரையை தொடங்க உள்ளேன்’ என்று அவா் அறிவித்தாா்.
மேலும், தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகர ராவ் குறித்து விமா்சித்த அவா், ‘மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பாஜகவுடன் கைகோா்த்துள்ளது. மக்ளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வா் சந்திரசேகர ராவ் தவறிவிட்டாா் என்றாா். நதி நீா் பிரச்னை குறித்து ஆந்திர, தெலங்கானா ஆகிய இரு மாநில முதல்வா்களும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.