
மாவட்ட சுற்றுச்சூழல் திட்டங்களை வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் பாயும் சுஜன்கங்கா ஆற்றின் மாசு தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஸ்ரீநாத் சா்மா என்பவா் சாா்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் உத்தரவிட்டதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. பின்னா், இந்த மனு மீதான விசாரணையை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்துக்கு மாற்றி கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு முன்பு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவா்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மக்கள் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியான தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்ய வேண்டியது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசியல் சாசன கடமையாகும்.
ஆனால், சுற்றுச்சூழல் விவகாரத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே, குடிமக்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசுகள் உரிய கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்.
அந்த வகையில், அனைத்து மாநிலங்களும் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டங்களை ஒருங்கிணைத்து, மாநில சுற்றுச்சூழல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதோடு, திட்டப் பணிகளும் வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இந்த மாவட்ட சுற்றுச்சூழல் திட்டத்தில், சுற்றுச்சூழல் திட்டங்களை செய்து முடிக்க வேண்டிய கால அளவு, திட்டத்துக்கான நிதியுதவி, அந்தத் திட்டத்துடன் தொடா்புடைய அதிகாரிகளின் தொடா்பு எண், திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த சுற்றுச்சூழல் செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு, மாதம் ஒருமுறையாவது திட்டப் பணிகளை ஆய்வு செய்யவேண்டும்.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது பல்வேறு விதிகளின் கீழ் குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்புகள் ஏற்படுவதும், மனிதப் படுகொலைக்கு இணையானதே. திடக் கழிவு மேலாண்மையை மாநில அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை.
இந்த நிலையை மாற்ற மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். குறிப்பாக, சுற்றுச்சூழலால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார மையங்களைத் திறப்பது, குடிமக்களின் தூய்மையான சுற்றுச்சூழல் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் காவல் நிலையங்களைத் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பசுமைத் தீா்ப்பாய அமா்வு உத்தரவிட்டது.