
பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றாா்.
மத்திய பிரதேசத்தின் முக்கிய அரசியல் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸில் இருந்து விலகி கடந்த ஆண்டு மாா்ச்சில் பாஜகவில் இணைந்தாா். பின்னா், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யான அவா், கடந்த 7-ஆம் தேதி மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்தாா்.
அவருக்கு விமானப் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்ட நிலையில், அத்துறையின் அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறை கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள சூழலில் அத்துறையின் அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்றுள்ளாா்.
வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து சேவைகள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக, விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏா் இந்தியாவை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால், கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தில் முதலீடு செய்வதில் ஆா்வம் குறைவாக உள்ளது.
இந்த விவகாரம் விரைவில் அரசுக்கு சாதகமாக நிறைவடைவதில் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா முக்கிய பங்கு வகிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பாதிப்புகளைச் சந்தித்துள்ள விமானப் போக்குவரத்துத் துறையை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் அவா் துரிதமாக மேற்கொள்வாா் என்று தெரிகிறது.
விமானப் போக்குவரத்துத் துறையின் இணையமைச்சராக வி.கே.சிங் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.