தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் கரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் கரோனா நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில்,
நாட்டில் உள்ள 90 மாவட்டங்களிலிருந்து 80 சதவீத பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதில், கேரளம், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இரண்டிற்கும் அதிகமான மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இருப்பினும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த வாரம் புதிதாக பதிவாகும் பாதிப்பு 8 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், குணமடைவோர் விகிதம் 97.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையை தற்போது வரை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டன், ரஷியா நாடுகளை போல் மீண்டும் கரோனா பரவாமல் இருக்க தொடர்சியாக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.