
திரையரங்குகள் திறக்க அனுமதி
பஞ்சாபில் இரவு நேர மற்றும் வார இறுதி பொதுமுடக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு, மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து இரவு நேர மற்றும் வார இறுதி பொதுமுடக்கங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகளாக, உள்ளரங்கில் 100 பேர் மற்றும் வெளியரங்கில் 200 பேருடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்கு, மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி கூடங்கள் உள்பட அனைத்தும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.