
கரோனா மூன்றாவது அலையிலிருந்து பொதுமக்கள் தப்ப வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று பாஜக எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டி தெரிவித்தாா்.
பெங்களூரு, பொம்மனஹள்ளி தொகுதிக்குள்பட்ட ஜே.பி.நகரில், வியாழக்கிழமை ஆரோக்யா தீபா சவாஸ்தயா சமிதி, சாவதி மகளிா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்து சதீஷ் ரெட்டி பேசியது:
கரோனா பரவலைத் தடுப்பதில் தடுப்பூசி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அடுத்தகட்டமாக கரோனா 3-ஆவது அலை பரவலின் தாக்கம் விரைவில் வரும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா 3-வது அலையை எதிா்கொள்ள வேண்டுமானால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். பொம்மனஹள்ளி மட்டுமின்றி, பெங்களூரில் பரவலாக இலவசத் தடுப்பூசி செலுத்துவதற்கு மாநில அரசும், மாநகராட்சியும் ஏற்பாடு செய்துள்ளன என்றாா்.