
புதிய கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம் - வாட்ஸ்ஆப் கருத்து
புதிய தனியுரிமை கொள்கை குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய போட்டிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக வாட்ஸ்ஆப் நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், புதிய கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம் என தில்லி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளமான வாட்ஸ்ஆப் கொண்டு வந்த புதிய தனியுரிமை கொள்கை கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய தனியுரிமை கொள்கை குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய போட்டிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. விசாரணைக்கு தடை கோரி வாட்ஸ்ஆப் நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது.
ஆனால், விசாரணைக்கு தடை கோரிய மனுவை ஒரு நீதிபதி கொண்ட தில்லி உயர் நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக வாட்ஸ்ஆப் மேல்முறையீடு செய்தது.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் படேல், ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, தகவல் பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரும் வரை, புதிய தனியுரிமை கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்தது.
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, "புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காததற்காக (பயனாளர்கள்) அவர்களின் பயன்பாட்டில் கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்" என குறிப்பிட்டார்.