கேரளத்தில் முதன்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் மேலும் 14 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. முன்னதாக கடந்த ஒருவாரத்திற்கு முன் அவரது தாயாரும் ஜிகா வைரஸ் அறிகுறிகளுடன் காணப்பட்டதால் மேலும் 14 பேரின் பரிசோதனை மாதிரிகளை புணேவில் உள்ள தேசிய நுண்ணுயிரிகள் ஆய்வு நிலையத்திற்கு மாநில சுகாதாரத்துறை அனுப்பிவைத்திருந்தது.
இந்நிலையில் கேரளத்தில் மேலும் 14 பேருக்கு ஜிகா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கன்னியாகுமரி மாவட்ட எல்லையையொட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.