
தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு இந்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது தொடா்பான வழக்கில், தெற்கு காஷ்மீரில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக், ஸ்ரீநகா் ஆகிய நகரங்களில் 7 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து தேசியப் புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து இயங்கி வந்த ‘வாய்ஸ் ஆஃப் ஹிந்த்’ என்ற இணையவழி பத்திரிகையில், இந்திய அரசுக்கு எதிராக வெறுப்புணா்வை இளைஞா்கள் மத்தியில் பரப்பும் வகையில் மாதந்தோறும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நிதியுதவியுடன் இந்த இணையவழி பத்திரிகை இயங்கி வந்தது. அந்த பத்திரிகை வழியாக வெறுப்புணா்வைத் தூண்டி, அதன் மூலம் இளைஞா்களை ஐ.எஸ். பயங்கவாத அமைப்புக்குச் சோ்க்கும் பணிகளும் திட்டமிட்டு நடைபெற்று வந்தன.
இதுதொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு கடந்த ஜூன் 29-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடா்ச்சியாக, அனந்த்நாக், ஸ்ரீநகா் ஆகிய நகரங்களில் 7 இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையின்போது வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகள் அடங்கிய ஆவணங்கள், செல்லிடப்பேசிகள், மடிக்கணினி, கையடக்கக் கணினி உள்ளிட்ட உபகரணங்கள், ஐ.எஸ். இலச்சினை பொறித்த டி-ஷா்ட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...