கப்பா வகை உருமாறிய கரோனா: ராஜஸ்தானில் 11 பேருக்கு பாதிப்பு

ராஜஸ்தானில், இதுவரை 11 பேருக்கு கப்பா வகை உருமாறிய கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.
கப்பா வகை உருமாறிய கரோனா: ராஜஸ்தானில் 11 பேருக்கு பாதிப்பு
கப்பா வகை உருமாறிய கரோனா: ராஜஸ்தானில் 11 பேருக்கு பாதிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், இதுவரை 11 பேருக்கு கப்பா வகை உருமாறிய கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆல்வார், ஜெய்ப்பூர் பகுதிகளில் தலா நான்கு பேருக்கும், பார்மெர் பகுதியில் இரண்டு வேருக்கும், பில்வாரா பகுதியில் ஒருவருக்கும் கப்பா வகை உருமாறிய கரோனா தொற்று பாதித்திருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கரோனா வைரஸிலிருந்து உருமாறிய அதிதீவிர வைரஸ்களில், டெல்டா வைரஸைக் காட்டிலும் பரவும் தன்மை சற்றுக் குறைந்தது கப்பா வைரஸ் என்றம் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

நாட்டில் ‘கப்பா’, ‘டெல்டா’ வகை உருமாறிய கரோனா தீநுண்மிகள் கடந்த 2 மாதங்களில் அதிக அளவில் பரவியதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டிலுள்ள 10 தேசிய ஆய்வகங்கள் இணைந்து கரோனா தொற்று பரவல் குறித்த ஆய்வை நடத்தின. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது,  பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ‘ஆல்ஃபா’ வகை உருமாறிய கரோனா தீநுண்மியின் (பி.1.1.7) பரவல், கடந்த ஒன்றரை மாதங்களில் இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிகளான கப்பா (பி.1.617.1), டெல்டா (பி.1.617.2) ஆகியவற்றின் பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்துக் காணப்பட்டது.

கப்பா, டெல்டா வகை கரோனா தீநுண்மிகள் முதலில் மகாராஷ்டிரத்தில் மட்டுமே பரவி வந்தன. ஆனால், தற்போது மேற்கு வங்கம், ஆந்திரம், தில்லி, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அத்தீநுண்மிகளின் பரவல் காணப்படுகிறது.

அதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான நபா்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினா். முக்கியமாக டெல்டா வகை உருமாறிய கரோனா தீநுண்மியின் பரவல் அதிக அளவில் காணப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 10 தேசிய ஆய்வகங்களை இணைத்து ‘இன்சாகாக்’ என்ற குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அமைத்தது. அக்குழுவானது கரோனா தீநுண்மியின் மரபணு தொடா்பான ஆய்வுகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com