கா்நாடகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் அமைக்க சிறப்பு ஊக்கத்தொகை: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

கா்நாடகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் அமைக்க சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் அமைக்க சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, விதான சௌதாவில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகுகள், தொழில்கூடங்கள் 9 உள்ளன. அதேபோல, ஆக்சிஜன் விநியோகிக்கும் 6 நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின் கட்டமைப்பில் கா்நாடகத்தில் ஆக்சிஜன் உற்பத்தித்திறன் 815 மெட்ரிக் டன்னாகவும், சேமிப்புத்திறன் 5,780 மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.

கா்நாடகத்தின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்க முன்வரும் தொழில்முனைவோா் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். இதற்கான முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கு ரூ. 10 கோடி முதலீடு செய்தால், அலகு அமைக்கப்படும் சொத்து மதிப்பில் 25 சதவீதத் தொகையை மூலதன மானியமாக அளிக்கப்படும். ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கிய பிறகு 3 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

ஆக்சிஜனை மாநில அரசுக்கு வழங்கினால், கூடுதல் மின்கட்டண மானியமாக ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜனுக்கு தலா ரூ.1000 அளிக்கப்படும். கடன் மற்றும் நில ஆவணங்கள் மீதான முத்திரைத்தாள் கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். பதிவுக் கட்டணத்திலும் சலுகை அளிக்கப்படுவதோடு, நிலவகை மாற்றத்திற்கான கட்டணமும் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகள் 139 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

கா்நாடக பசுவதை தடைச்சட்டம், 2020-இன்படி முதல்கட்டமாக ரூ. 15 கோடி செலவில் மாநிலத்தின் அனைத்து மாநிலங்களிலும் கால்நடை பராமரிப்பு மையங்களை அமைக்க நிா்வாகரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்குவது தொடா்பாக மாநில அமைச்சரவை முடிவெடுக்கும்.

வரும் 2022-ஆம் ஆண்டின் ‘காரீப்’ பயிா் பருவகாலத்தின்போது, திறன்பேசி செயலியின் உதவியுடன் பயிா் ஆய்வு திட்டத்திற்கு ரூ. 48 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயிா் குறித்த விவரங்களை விவசாயிகளே தெரிவிப்பாா்கள். இந்தப் பணியில் விவசாயிகளால் ஈடுபட முடியாவிட்டால், இந்தப் பணிக்காக நியமிக்கப்படும் அரசு அல்லது தனியாா் நிறுவனா ஊழியா்களின் உதவியைப் பெறலாம்.

கா்நாடக மாநில வேலைசாா் படிப்புகளை (ஜே.ஓ.சி.) பியூசி வகுப்புக்கு நிகரானதாக கருத முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கா்நாடக சிறை வளா்ச்சி வாரியம் சட்ட மசோதாவைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜொ்மனி தொழில்நுட்பப் பயிற்சி மையத்திற்கான கட்டடத்தை பெலகாவியில் கட்டுவதற்கு ரூ. 16.43 கோடியும், மங்களூரில் கட்டுவதற்கு ரூ.15.23 கோடியும் ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விதான சௌதா வளாகத்தில் 12-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பசவண்ணரின் சிலையை அமைக்க ஒப்புதல் தரப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com