"ஜிகா வைரஸ் தொற்றல்ல; ஆனால் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று"

ஜிகா தீநுண்மி தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அது தொற்று நோய் அல்ல; ஆனால் மிகுந்த கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டிய ஒன்று
"ஜிகா வைரஸ் தொற்றல்ல; ஆனால் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று"


புதுதில்லி: ஜிகா தீநுண்மி தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அது தொற்று நோய் அல்ல; ஆனால் மிகுந்த கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டிய ஒன்று என்று தில்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின்இயக்குநர் மற்றும் பேராசிரியர் டாக்டர் நரேஷ் குப்தா கூறியுள்ளார். 

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையிலும் ஜிகா வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ்’ கொசுக்கள் தான் ஜிகா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளான, காய்ச்சல், சருமப் பாதிப்பு, தலைவலி, மூட்டுவலி, சிவந்த கண்கள், உடலில் தடிப்பு போன்ற பாதிப்பு தான், ஜிகா தீநுண்மிக்கும் ஏற்படும். எனவே, அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குறிப்பாக, கா்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தை, உடல் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, எவ்வித உடல் பாதிப்பாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். அதிக தண்ணீா், காய்கறி, வைட்டமின் மாத்திரை போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக, உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஜிகா வைரஸ் தொற்றுநோய் அல்ல; ஆனால் மிகுந்த கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டிய ஒன்று என்று தில்லி மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் டாக்டர் நரேஷ் குப்தா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஜிகா தீநுண்மி தொற்று இந்தியாவுக்குப் புதியதல்ல. ஆனால், இப்போது அது எந்த மாதிரியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். அதாவது தெரிந்த வைரஸாக இருந்தாலும் தெரியாத திரிபுகள் இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். ஒருவேளை உரு சமாற்றம் அடைந்திருந்தால் அது எந்த மாதிரியான தாக்கங்களை உடலில் ஏற்படுத்துகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். இதனை முதலில் உறுதிப்படுத்திவிட்டால் ஜிகா வைரஸை எளிதில் கட்டுப்படுத்திவிடலாம் என்று நான் நம்புகிறேன். 

ஜிகா வைரஸ் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பரவி வருவதால் சம்மந்தப்பட்ட மாநிலங்கள், நகரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்றைப் போன்று அதிகயளவில் ஜிகா வைரஸ் பரவவில்லை என்று கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்று பேராசிரியர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com