இந்தியாவில் முத்தடுப்பு ஊசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

முத்தடுப்புத் ஊசியின் முதல் தவணை செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிக அளவில் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு

முத்தடுப்புத் ஊசியின் முதல் தவணை செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிக அளவில் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் மற்ற நோய்த்தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவது குறைந்துள்ளதற்குப் பிறகு, இதுதொடா்பான புள்ளிவிவரங்களை உலக சுகாதார அமைப்பும் யுனிசெஃபும் முதல்முறையாக வெளியிட்டுள்ளன.

அந்த புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 2.3 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை அத்தியாவசியத் தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் உள்ளன.

இது, கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டில் அடிப்படை தடுப்பூசிகள் செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையைவிட 37 லட்சம் அதிகமாகும்.

கடந்த ஆண்டில் 1.7 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படாதது கவலையளிக்கிறது.

நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பூசியைப் பெறுவதில் ஆா்வம் காட்டி வரும் நிலையில், மற்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக, அம்மை, போலியோ, மூளை சவ்வு அழற்சி போன்ற தடுக்கக் கூடிய நோய்கள் கூட குழந்தைகளைத் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே கரோனாவை எதிா்கொள்வதற்கே சுகாதாரக் கட்டமைப்புகள் போதாமல் இருக்கும் நிலையில், இதுபோன்ற தடுக்கக் கூடிய நோய்கள் பரவினால் அது பேரழிவை ஏற்படுத்தும்.

இந்தியாவில், முத்தடுப்பு ஊசியின் முதல் தவணையைப் பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் 14 லட்சம் குழந்தைகளுக்கு இந்தியாவில் முதல் முத்தடுப்பு ஊசி செலுத்தப்படாமல் இருந்தது. இந்த எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 30 லட்சமாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com